கோவை: கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, 5 பேர் கும்பலை பிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகேயுள்ள கீரணத்தம் லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் கோகுல் (23). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கோகுல், ரவீந்திரன், சுஜிமோன், நரி மணிகண்டன், கவுதம் உள்ளிட்டோர் சரவணம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் கழித்து இவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம். நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது கோகுல் சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நிபந்தனை அடிப்படையில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, கோகுல் கடந்த ஜனவரி 28-ம் தேதி, கடந்த 6-ம் தேதியும் கையெழுத்திட்டார்.
பின்னர், மூன்றாவது முறையாக கையெழுத்து போடுவதற்காக, நண்பரான சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரத்தைச் சேர்ந்த மனோஜ்(22) என்பவருடன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இன்று (பிப் 13) கோகுல் வந்தார். ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்னர், நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் நுழைவாயில் வழியாக கோபாலபுரம் 2-வது வீதிக்கு கோகுல், மனோஜ் ஆகியோர் வந்தனர். அங்குள்ள கூட்டுறவு வீட்டுவசதி வாரிய அலுவலகம் எதிரேயுள்ள பேக்கரியில் இருவரும் டீ சாப்பிட நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கோகுலை கத்தி, அரிவாள் போன்றவற்றால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற மனோஜையும் வெட்டினர். கழுத்தில் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் மனோஜ் காயமடைந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், மனோஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த கோகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்த போது, மர்மநபர்கள் வெட்டிவிட்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விசாரணை தீவிரம் : இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்ரீராம் கொலைக்கு பழிவாங்குவதற்காக இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ரத்தினபுரியைச் சேர்ந்த சூர்யா, கவுதம், வெள்ளலூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன், சித்தாபுதூரைச் சேர்ந்த கவாஸ்கான் உள்ளிட்ட 5 பேருக்கு இக்கொலையில் தொடர்பிருப்பது தெரியவருகிறது. அவர்களை தேடி வருகிறோம்’’ என்றனர்.