பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 700 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 700 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு தோற்று வித்த அமைப்பு ஒன் ஸ்டாப் சென்டர் எனப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம். பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சகம், தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பதற்கான நிதியை நிர்பயா நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளது.

இதற்கான `சகி’ எனும் திட்டம், 2015 ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. நீலகிரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து மைய நிர்வாகி ஹெலனா கூறும்போது, "தமிழகத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமை,குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள், ஆசிட் வீச்சு, கடத்தல், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை எனப் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் இங்கு வந்தால், உடலில் காயங்கள் இருந்தால் முதலில் சிகிச்சையும், பின்னர் மனநல ஆலோசனையும் வழங்கப்படும். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் அலுவலகத்திலுள்ள அறையில் 5 நாட்கள் தங்கிக் கொள்ளலாம்.

தேவையான காவலாளிகள் பாதுகாப்பு மற்றும் சமைத்து சாப்பிட அறைகள் உள்ளன.இந்த மையம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில், இதுவரை பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த 700 சம்பவங்கள் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 692 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்பாதிக்கப்பட்டால், 181 என்ற எண்ணுக்கு தைரியமாக தொடர்பு கொண்டு புகார்அளிக்கலாம் அல்லது இந்த அலுவலகத்துக்கு நேரில் வரலாம்" என்றார்.

SCROLL FOR NEXT