தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார். 
க்ரைம்

தி.மலை ஏடிஎம் மையங்களில் கொள்ளை: தஞ்சாவூரில் 48 இடங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: திருவண்ணாமலையில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்து பதுங்கி உள்ளனரா? என்பதைக் கண்டறிய 48 இடங்களில் போலீஸார் நேற்று வாகன சாதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காரில் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க உஷார்படுத்தப்பட்டனர்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் கொள்ளையர்கள் வந்துள்ளனரா என போலீஸார் நேற்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்தும், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்குடி, அணைக்கரை, நீலத்தநல்லூர், அம்மாப்பேட்டை, அற்புதாபுரம், கல்லணை உட்பட 8 இடங்களில் சோதனை சாவடி அமைத்து, போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர, மாவட்டத்தில் மேலும் 40 இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, சோழன் சிலை ஆகிய பகுதிகளில் தஞ்சாவூர் மேற்கு இன்ஸ்பெக்டர் வி.சந்திரா தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, கார், வேன்,இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த உடமைகளை முழுவதுமாக சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT