திருப்பத்தூர் / வேலூர்: திருவண்ணாமலையில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டதை தொடர்ந்து, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலை அடுத்தடுத்த பகுதியில் ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் வைத்து உடைத்து அதிலிருந்த ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பலாக இருக்கும் என காவல் துறையினர் உறுதிபடுத்துள்ளனர்.
மேலும், திருவண்ணாமலை வழியாக கொள்ளையர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்றி ருக்கலாம் என்பதால், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் நேற்று காலை முதல் மாவட்ட எல்லைப் பகுதிகள், சுங்கச் சாவடி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதி, செட்டியப் பனூர் கூட்டுச்சாலையில் நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ் வழியாக வந்த கார், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும் காவல் துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தினர். காட்பாடி, கிறிஸ்ட்டியான்பேட்டை, பேரணாம்பட்டு, பத்திரப் பல்லி, சேர்க்காடு, பனமடங்கி, பரதராமி, குடியாத்தம் அடுத்த சைனகுண்டா போன்ற பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையை நேற்று தீவிரப்படுத்தினர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்களிலும் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தி, புதிதாக அறை எடுத்து தங்க வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.