ராணிப்பேட்டை: கர்நாடக மாநிலம் பெங்களூரு உசரி மசூதி தெருவைச் சேர்ந்தவர் சுயப்பு ரகுமான் (41). இவர், நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து காரில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவுக்கு வந்தார்.
அப்போது, பச்சையப்பன் தெருவில் வந்தபோது கார் திடீரென பழுதடைந்தது. உடனடியாக ஆட்டோ நகர் மெக்கானிக் முரளி என்பவரை அழைத்து, காரில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும்,இந்த விபத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து கருகின. இது குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.