சென்னை: ஏரோனாட்டிக்கல் படித்துவிட்டு, மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்பியன்(35). மருத்துவரான இவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் தனது லைசென்ஸை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டார். பலமுறை முயற்சி செய்தும் புதுப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (தமிழகம்) அலுவலகத்துக்கு வந்து இதுகுறித்து விசாரித்தார். இவரது லைசென்ஸை வேறொருவர் புதுப்பித்திருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த செம்பியன் இதுகுறித்து உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, அண்ணாநகர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, மருத்துவர் செம்பியன் பெயரில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு செம்பியன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன்(36) கடந்த 2019-ம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட செம்பியன் குறுக்கு வழியில் மருத்துவராகத் திட்டமிட்டு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்துக்குச் சென்று செம்பியன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் பட்டியலை எடுத்துள்ளார். அதில் இவரது பெயரில் பல பேர் இருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தது. தீவிரமாகத் தேடிய போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான செம்பியன் என்பவரின் வயது ஒத்துப்போயுள்ளது.
இதையடுத்து உண்மையான மருத்துவர் செம்பியன் புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு, இவரது புகைப்படம் மற்றும் முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு போலி மருத்துவர் செம்பியன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தரமணியில் மருந்தகத்துடன் கூடிய மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.
சிகிச்சை தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டபோதெல்லாம் யூடியூப் உதவியுடன் தகவல்களைத் திரட்டிசிகிச்சை அளித்துள்ளார். பலமருத்துவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம். மோசடிக்கு உடந்தையாக வேறு யாரேனும் உள்ளார்களா என விசாரித்து வருகிறோம் என்றனர்.
மற்றொரு போலி மருத்துவர்: எண்ணூர், நேதாஜி நகரைச்சேர்ந்தவர் சுதர்சன் குமார் (55).இவர் மருத்துவர் படிக்காமல், 30ஆண்டுகளாக கிளினிக் என்ற பெயரில் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.