கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில், சிறுவனைக் கடத்தி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி ராஜா. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமுதாவை, ராஜா தாக்கியுள்ளார்.
இதில், காயம் அடைந்த அவரை அவரது அண்ணன் காளியப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில், காளியப்பன் வீட்டுக்கு நேற்று சென்ற ராஜா, அங்கு விளையாடிக் கொண்டிருந்த காளியப்பனின் 3 வயது மகனைக் கடத்தி சென்றார். மேலும், சிறுவனைத் தனது வீட்டுக்குள் அடைத்துப் பூட்டிய ராஜா, சிறுவனை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பாரூர் எஸ்ஐ செல்வராகவன் தலைமையிலான போலீஸார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ராஜா திடீரென வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு, கையில் லைட்டரை வைத்து மிரட்டினார்.
இதையடுத்து, போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுவனை மீட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு எரிவாயு சிலிண்டரை செயலிழக்கச் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாரூர் போலீஸார், ராஜாவை கைது செய்தனர்.