கோவை: கோவையில் பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடிய கைதியை பிடிக்க தேடுதல் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள வெல்வார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாலிப்ராஜா (31). இவர் மீது திருப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லூர், வீரபாண்டி, பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு தொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தாலிப் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக தாலிப் ராஜா, செல்வராஜ், அமிர்தலிங்கம் ஆகிய கைதிகள் மூன்று பேரை திருப்பூர் காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், மாலை திருப்பூரில் இருந்து கோவைக்கு மூவரையும் பேருந்தில் காவலர்கள் அழைத்து வந்தனர்.
வரும் வழியில் ஒண்டிப்புதூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்து மெதுவாகச் சென்றது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாலிப் ராஜா, காவலர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு, பேருந்திலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தார். அதிர்ச்சியடைந்த காவலர்கள் கைதியை பிடிக்க முயன்றனர். அதற்குள் தாலிப்ராஜா தப்பியோடி விட்டார்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறையின் ஆயுதப் படை தலைமைக் காவலர் கோபிநாத், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தாலிப் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பிய அவரை பிடிக்க திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.