கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்குட்ப்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக, நாச்சியார்கோயில் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் போலீஸார், நாச்சியார்கோயில், வண்டிப்பேட்டையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த திருநரையூர், வெள்ளத்துடல் வடகட்டளையைச் சேர்ந்த முருகானந்தம் மகன் ரஞ்சித் (20) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவரிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிந்து, அவரை கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: “ரஞ்சித் திருச்சி மற்றும் திண்டுக்கல்லிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, பிளாஸ்டிக் சிறிய பைகளில் பிரித்து, தினந்தோறும் தனக்கு நெருக்கமான 20 பேருக்கு மட்டும் 20 பாக்கெட் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு சென்று விடுவார்.
அதன் பிறகு மறுநாள்தான் அவரை விற்பனை செய்வார். இவர், பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவது தெரிந்ததை அடுத்து, அவரை அண்மைக்காலமாக கண்காணித்து இன்று பிடித்தோம்” எனத் தெரிவித்தார்.