தஞ்சாவூர்: கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கியதில் ரூ.8.88 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவையாறு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பூதலூர் கிளையில் 28.10.2004 முதல் 30.6.2005 வரை கடன்கள் வழங்கியதில் ரூ.8.88 லட்சம் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் வணிக குற்றப் புலனாய்வு காவல் பிரிவில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பி.காளிமுத்து புகார் செய்தார்.
இதன்பேரில் காவல் துறையினர் 17.7.2008-ல் வழக்குப் பதிவு செய்தனர். தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட வி.சிவராமன், காசாளர்கள் பி.செல்வநாயகம் (கூட்டுறவு காலனி கிளை), எம்.கருணாநிதி (பூதலூர் கிளை), பள்ளி அலுவலக உதவியாளர்கள் மற்றும் கடன்பெற்ற ஆசிரியர்கள், பள்ளி இரவுக் காவலர்கள், தபால்காரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திருவையாறு குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதித்துறை நடுவர் விசாரித்து 17 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இவர்களில் 14 பேருக்கு தலா ரூ.4 ஆயிரமும், 3 பேருக்கு தலா ரூ.6 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.