சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே உதவி ஆய்வாளர் அன்புதாசன் (30), காவலர்கள் சரண்ராஜ், யோகராஜ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்தகார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் அன்புதாசன், சாலையில் சென்றுக் கொண்டிருந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வேதராஜ் (55), அதே பகுதியை சேர்ந்த நான்சி (21), சாய்னா (38), ஆபிதா (65), ஜூலி (36), சதாம் உசேன் (30), இளையராஜா (37) ஆகியோர் மீதும் அடுத்தடுத்து மோதியது.
இதில், காயமடைந்த 8 பேரும் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த காரை ஓட்டி வந்தது பழைய வண்ணாரப்பேட்டை வீரபதி செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த உமாபதி (41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், உமாபதியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், தைப்பூசத்தையொட்டி தனது காரில் திருத்தணி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, திடீரென கார் பிரேக் செயல் இழந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.