திருச்சி: புலிவலத்தில் 4 நாட்களுக்கு முன்பு காணாமல்போன பெண்கள் இருவர் துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகேயுள்ள பகளவாடியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மனைவி சம்பூர்ணம்(48), ராஜா மனைவி பெரியம்மாள்(45). நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் கணவரை இழந்தவர்கள். கோயில்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்று வந்துள்ளனர்.
இது இருவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்காததால், கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரியில் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய புலிவலம் போலீஸார், இருவரையும் திருச்சியில் மீட்டு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு பிப்.1-ம் தேதி முதல் சம்பூர்ணம், பெரியம்மாள் ஆகிய இருவரும் மீண்டும் காணாமல் போயினர். இதுதொடர்பாக, போலீஸாரிடம் புகார் தெரிவிக்காமல், அவர்களின் குடும்பத்தினரே தேடி வந்தனர். இந்நிலையில், துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்லும் சாலையில், சோதனைச் சாவடிக்கு அருகே 20 அடி பள்ளத்திலுள்ள பாறையின் மீது அழுகிய நிலையில் 2 பெண்களின் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அது சம்பூர்ணம், பெரியம்மாள் ஆகியோரின் சடலங்கள் என தெரியவந்தது. இதையடுத்து, சடலங்களை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.