கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலையிலுள்ள வீடுகளிலிருந்த செல்போன்களை வியாபாரி போல் நடித்து திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது.
சுவாமிமலை, கீழவடம் போக்கி தெரு மற்றும் கண்டோஜி தெரு ஆகிய தெருக்களிலுள்ள 2 வீடுகளில் நேற்று அடுத்தடுத்து விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போனதாகப் புகார் வந்தது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ராதா மகன் சக்தி கதிரவன் (20), அளித்த புகாரின் பேரில், சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில், அப்பகுதியிலிருந்த, அய்யம்பேட்டை சக்கராபள்ளியைச் சேர்ந்த ஹாஜா மைதீன் மகன் முகமது இப்ராம்ஷா (21), தமீம் அன்சாரி மகன் ரஹமத்துல்லா (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் 3 பேரும் டாடா ஏசி வாகனம் மூலம் பழைய இரும்பு வாங்கி வியாபாரம் செய்வது போல், வந்து வீடுகளில் நோட்டமிட்டு செல்போன்களை திருடி வருவது தெரிய வந்தது.
பின்னர், அவர்களிடமிருந்த ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள. 2 ஆன்ட்ராய்டு செல்போன்களையும், பழைய இரும்பு சாமான் வாங்கப் பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்து, சிறுவனை தஞ்சாவூரிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற 2 பேரைக் கும்பகோணம் கிளைச் சிறையிலடைத்தனர்.