க்ரைம்

சென்னை | ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி வழிப்பறி செய்த கும்பலை பிடிக்க தனிப்படை

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸ் போல் நடித்து ஆந்திரநகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடிவழிப்பறி செய்த கும்பலைப் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(45). இவர் அங்கு நகைக்கடை வைத்துள்ளார். சுப்பாராவ் அடிக்கடி சென்னை வந்து,சவுக்கார்பேட்டையில் உள்ள நகை வியாபாரிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகைகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலைதனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க ரூ.1 கோடியே40 லட்சம் பணத்துடன் தனியார் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்திறங்கினார்.

பின்னர், அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் சவுக்கார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். யானை கவுனி, துளசிங்கம் தெரு - வீரப்பன்தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்தகார், ஆட்டோவை முந்திச் சென்று வழிமறித்து நின்றது. அதில் இருந்துடிப்டாப் உடை அணிந்த 3 இளைஞர்கள் இறங்கினர்.

சுப்பாராவ் மற்றும் அவரது மேலாளரிடம் சென்ற அவர்கள், ‘நாங்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே சோதனையிட வேண்டும்’ என்று கூறி சுப்பாராவ் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.1.40 கோடி இருந்தது தெரியவந்தது.

அந்த பணம் குறித்து விசாரித்தஇளைஞர்கள், அதற்கான ஆவணம் மற்றும் ரசீதை கேட்டனர். `இது எனது பணம்தான், நான் நகைவாங்க வந்துள்ளேன்' என சுப்பாராவ் எவ்வளவோ கூறியும் இளைஞர்கள் கேட்கவில்லை. அவர்கள் கையில் லத்தி மற்றும் கைவிலங்கு இருந்ததால் சுப்பாராவ் அவர்களை போலீஸார் என முழுமையாக நம்பிவிட்டார்.

இந்நிலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, இளைஞர்கள் 3 பேரும் திடீரென சுப்பாராவ் மற்றும் அவரது மேலாளரைத் தாக்கிவிட்டு,கத்தி முனையில் மிரட்டி, பணத்துடன், தாங்கள் வந்த காரிலேயே தப்பினர். அதிர்ச்சி அடைந்த சுப்பாராவ் இதுகுறித்து யானைகவுனி போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சுப்பாராவ் நகை வாங்க வருவதை தெரிந்து கொண்ட கும்பல், அவரைப் பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்துள்ளது. எனவே, இது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கும்பலா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த கும்பலா என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT