பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேமெதிபாளையம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் மகன் மனோஜ்குமார்(13). தந்தை உயிரிழந்ததால், தாய் அகிலா பராமரிப்பில் இருந்து வந்த மனோஜ்குமார், கடந்த மாதம் 21-ம் தேதி சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மனோஜ்குமார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு மயங்கி கீழே விழுந்ததால், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக மறுவாழ்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சிறுவனின் தாய் தன் மகன் மனோஜ்குமார் போதை மறுவாழ்வு மையத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சோழவரம் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், போதைமறுவாழ்வு மைய உரிமையாளரான, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார்(39) மற்றும் ஊழியர்களான, கும்மிடிப்பூண்டி, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜீவிதன்(30), ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லிபாபு(26), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த யுவராஜ்(24) ஆகிய 4 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், விஜயகுமார், ஜீவிதன், டில்லிபாபு, யுவராஜ் ஆகிய 4 பேர் மனோஜ்குமாரை கட்டையால் தாக்கியதோடு, காலால் உதைத்துள்ளனர். இதனால், மனோஜ்குமார் வாந்தி மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது