கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி பகுதியில் அனுமதியின்றி வெளி மாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் இருப்பு வைத்து, விற்பனை செய்து வருவதாகக் கும்பகோணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதனையடுத்து, அந்த இடத்திற்கு சென்ற கும்பகோணம் தாலுக்கா ஆய்வாளர் (பொறுப்பு) சிவசெந்தில்குமார் தலைமையில் போலீஸார், மணஞ்சேரி அக்ரஹாரத்திலுள்ள ஒருவரது வீட்டில் சோதனையிட்ட போது, அங்கு 180 மிலி அளவு கொண்ட 1824 பாட்டில்களும், டின் பீர் 24 பாட்டில்களும், 720 மிலி அளவு கொண்ட 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வெளிமாநிலத்தை சேர்ந்த இந்த மதுபாட்டில்கள் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பாகும்.
போலீஸார் விசாரணையில், அங்குள்ள அக்ரஹாரத்திலுள்ள ஒரு வீட்டை, ஊராட்சி மன்றத் தலைவர் பெரியவன் (என்கின்ற) முருகனின் உறவினர் அய்யர் (என்கின்ற) சக்திவேல் வாடகைக்கு இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் தாலுக்கா போலீஸார், ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், இவரது உறவினர் சக்திவேல், இவரது மனைவி மற்றும் ஈஸ்வரிஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
இதில் முருகன், சக்திவேல், ஈஸ்வர் ஆகியோர் மீது கும்பகோணம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்ற ஆசீஸ்ராவத், முதல் நடவடிக்கையாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறிச் செய்தால், சிறையிலடைக்கப்படும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மணஞ்சேரியில், வெளி மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டில்கள் வந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.