க்ரைம்

சென்னை | கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறைக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கோட்டைசாமி, சென்னை துறைமுகம் சத்யா நகரைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பாக நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், கோட்டைசாமிக்கு ரூ.1.70 லட்சமும், உதயகுமாருக்கு ரூ.2.90 லட்சமும் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT