திருச்சி: திருவெறும்பூரில் தொழிலதிபர் வீட்டில் நகைகள், பணம் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 118 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் காலனியைச் சேர்ந்தவர் நேதாஜி (65). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற இவர், தனது 3 சகோதரர்களின் குடும்பங்களுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். பெட்ரோல் நிலையம், கிரஷர் கம்பெனி, சாலை கட்டுமான நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜன.23-ம் தேதி இவரது சகோதரர் மகனுக்கு திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதையடுத்து நேதாஜி குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹோட்டலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர், அவர்கள் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டு கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 92 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
தகவலறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்டோர் அங்குசென்று விசாரணை நடத்தினர். பின்னர் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், கமலவேணி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் சிசிடிவி காட்சிகள், பழைய குற்றவாளிகள், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள், சம்பவ நேரத்தில் அப்பகுதியில் நடமாடியவர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு கார் பதிவாகியிருந்தது.
இதற்கிடையே நேற்று மஞ்சத்திடல் பகுதியில் தனிப்படை போலீஸார் வாகனத் தணிக்கை செய்தபோது, சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது போன்ற ஒரு கார் நிற்காமல் சென்றது. போலீஸார் விரட்டிச் சென்று வேங்கூர் சுடுகாடு அருகே காரை மடக்கி, காருக்குள் இருந்தவரிடம் விசாரித்தபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜர் காலனியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வகார்த்திக் (37) என்பதும், அவர் தொழிலதிபர் வீட்டில் நகைத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 118 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாட்டினம், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள், 2 லேப்டாப், 4 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
தனிப் படையினருக்கு பாராட்டு: இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் நேற்றிரவு திருவெறும்பூர் காவல்நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தனிப்படை போலீஸார் சிறப்பாக செயல்பட்டு ஒரு வாரத்துக்குள் திருடியவரை கைது செய்துள்ளனர்.
செல்வ கார்த்திக் மீது திருவெறும்பூர், நவல்பட்டு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. சிறப்பாக செயல்பட்ட எஸ்.பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட தனிப்படையினருக்கு பாராட்டுகள்” என்றார். தனிப்படை போலீஸார் சிறப்பாக செயல்பட்டு ஒரு வாரத்துக்குள் திருடியவரை கைது செய்துள்ளனர்.