கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிட ஒப்பந்தப் பணியை ஓசூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.
இங்கு, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கந்தனூரைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் அண்மையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி இரவு கட்டிடப் பணி நடைபெறும் பகுதியில் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த பொறியாளர் தங்கராஜ் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் சேர்ந்து பிரபாகரனை திருடன் என நினைத்து அவரை 2 நாட்களாகக் கட்டி வைத்து தாக்கினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சூளகிரி போலீஸார், பிரபாகரனை மீட்டு, சிகிச்சைக் காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கட்டிட ஒப்பந்ததாரர் மணி (47), பொறியாளர் தங்கராஜ் (33) மற்றும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேரைக் கைது செய்தனர்.