க்ரைம்

சென்னை | ஐ.டி. பெண் ஊழியர் இறந்த வழக்கில் கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஐடி பெண் ஊழியர் இறந்த விவகாரத்தில் கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளசுரங்கப் பாதை அருகில், பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்று வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்ற போது, இடிக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி நடைபாதையில் சரிந்து விழுந்தது.

அப்போது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான பத்மப்பிரியா(22) இடிபாடுகளில் சிக்கி, உடல் நசுங்கி பலியானார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (22) என்ற இளைஞரும் காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாகக் கட்டிடத்தை இடிக்கப் பயன்படுத்திய பொக்லைன் உரிமையாளர் ஞானசேகரன் (35), பொக்லைன் ஓட்டுநர் பாலாஜி (25), மேற்பார்வையாளர் ஜாகீர் உசேன் (47) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT