கோவையில் புராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் கீழ் அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய வடவள்ளி காவல்நிலைய போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன். 
க்ரைம்

வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையங்களுக்கு விருது

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புராஜக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றங்களும் நடக்காமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக காவல் நிலையங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட 60 பெண் காவலர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்டத்தில் உள்ள 1,208 பள்ளிகளில், 3,561 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக 1.90 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் விருது வழங்கி பாராட்டினார். சிறப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பெண் காவலர்கள் கவுசல்யா, மீனா பிரியா, பிரேமா, சரிதா ஆகியோருக்கு புத்தகங்கள் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

SCROLL FOR NEXT