ஓசூர்: ஓசூர் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் கொலை தொடர்பாக, அப்பெண்ணின் காதலன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூரை அடுத்த நெரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (23). இவர் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரும் முதுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர், பிரியங்காவின் தந்தை வெங்கடசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார் வெங்கடசாமி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராமன்தொட்டி வனப் பகுதியில் பிரியங்கா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பேரிகை போலீஸார், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, கொலையாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பிரியங்காவின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரிகை காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொலை தொடர்பாக ஸ்ரீதர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.