க்ரைம்

திருவள்ளூர் | பெண்ணை வெட்டி நகை கொள்ளை: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு அரிவாளால் வெட்டி 16.5 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி உதயகுமார். இவரது மனைவி மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டினார்.

இதற்கு அவர் மறுக்கவே அவரை அரிவாளால் வெட்டி கைகளை கட்டி போட்டு வாயையும் துணியால் கட்டினார். சிறிது நேரத்தில் பீரோ சாவி இருக்கும் இடத்தை மாலதி கூறியவுடன் மர்ம நபர் பீரோவில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கேட்டைத் திறந்து கொண்டு மீண்டும் வெளிப்புறம் பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

மாலதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். தகவல் அறிந்து ஆரணி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் 16.5 பவுன்நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்நிலையில் மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெய்பீ ஆகிய இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 16.5 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்ட போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT