கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். நான்குவழிச்சாலை குறுக்கிடும் பகுதியில் தொடரும் விபத்துகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (75). எட்டயபுரம் அருகே கழுகாசலபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான புஞ்சை நிலத்தை பார்ப்பதற்காக தனுஷ்கோடி நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் வழியில் நான்குவழிச்சாலையை கடந்த போது, மதுரையில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது.
சம்பவ இடத்திலேயே தனுஷ்கோடி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற எட்டயபுரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார் ஓட்டுநர் திருச்சி மாவட்டம் துறையூர் சத்தியம் பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரம்(35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்துகள்: நான்கு வழிச்சாலை அமைக்கும் போதே, எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையின் இடையே குறுக்கிடும் மதுரை - தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதியில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் தொடராமல் இருக்க மதுரை - தூத்துக்குடி இடையே எட்டயபுரம் விலக்கு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். தற்காலிக ஏற்படாக பேரிகார்டு வைப்பது பலனிக்காது. அது மேலும் விபத்துகளை அதிகரிக்கவே வழிவகுக்கும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.