க்ரைம்

சென்னை | பெண் எஸ்ஐ-யை தாக்கிய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அயனாவரம், திருவள்ளுவர் சாலை வழியாக நேற்று முன்தினம் மதியம் சவ ஊர்வலம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இருவர், இறந்தவர் நினைவாகச் சாலையில் சேவல் சண்டை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீனா, காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சேவல் சண்டையை நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதனால், போலீஸாரிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டதோடு பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவருடன் வந்த காவலரையும் உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் மீனா அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், போலீஸாரை தாக்கிவிட்டுத் தலைமறைவாக இருந்ததாக அயனாவரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த குணசேகரன் (35), அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT