க்ரைம்

சிறுமியை கடத்திசென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் விதித்தார்.

புதுச்சேரி, வில்லியனூர் கணுவாபேட்டை புது நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சென்னை நொச்சிக்குப்பம் விஜி என்ற விஜய் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தந்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் விஜி என்கிற விஜய், இவரது தாய் லதா ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின்போது கடத்தி செல்லப்பட்ட சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததால் விஜய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்.

இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் புதுவை நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட விஜி என்கிற விஜய்க்கு சிறுமி ஏமாற்றி கடத்தி செல்வது உள்ளிட்ட காரணங்களுக்காக 3 பிரிவுகளில் மொத்தம் 10 ஆண்டுகளும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது தாய் லதாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து விஜய் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் தர அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT