க்ரைம்

பேருந்தும், லாரியும் மோதியதில் ஊத்தங்கரை அருகே 45 பேர் காயம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதியதில், 45 பயணிகள் காயம் அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு, மேல் மலையனூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனியார் சொகுசு பேருந்தில் சென்றனர். சுவாமி தரிசனம் செய்த பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பேருந்து ஊத்தங்கரை கொல்லப்பட்டி அருகே வந்தபோது, எதிரே மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வெங்காயம் பாரம் ஏற்றி வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 45 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், ஈச்சம்பள்ளம் ஆதி (46), கவிதா (24), பிரியதர்ஷினி (12), தர்மன் (25), அங்கம்மாள் (29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT