கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் எஸ்ஐ-க்களைத் தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி பயிற்சி எஸ்ஐ பார்த்திபன், எஸ்ஐ ராஜா, எஸ்எஸ்ஐ பழனியப்பன் ஆகியோர் காவேரிப்பட்டணம் 4 ரோடு விநாயகர் கோயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை மது போதையில் இருந்த சிலர் செல்போனில் படம் எடுத்தனர்.
இதைக் கவனித்த எஸ்ஐ-க்கள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது, அங்கிருந்த இந்து முன்னணி நகரத் தலைவர் ராஜேஷ் (34) மற்றும் சிலர் சேர்ந்து எஸ்ஐ-க்கள் பார்த்திபன், ராஜா, பழனியப்பன் ஆகியோரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இது தொடர்பாக பயிற்சி எஸ்ஐ பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில், ராஜேஷ் மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.