க்ரைம்

ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் திருட முயன்ற 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஓசூர் சிவக்குமார் நகர் 9-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட நாகராஜ் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள பீரோவை உடைத்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் 3 பேர் இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டு, மத்திகிரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீஸார் விரைந்து சென்று வீட்டின் உள்ளே இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கெலமங்கலம் ஜீவா நகரைச் சேர்ந்த முருகன் (38), முதுகானப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26), யாரப் (26) என்பது தெரிந்தது. மேலும், நாகராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டுத் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT