சென்னை: சென்னையை சேர்ந்தவர் எம்.எஸ்.ராஜேந்திரன். இவருக்கும் சென்னை முகப்பேரை சேர்ந்த பிரதிக்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தற்போது மும்பையில் வசித்து வரும் பிரதிக், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிரபலதுணிக்கடைக்கான உரிமத்தை வாங்கித் தருவதாக ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இலச்சினை, சீல், நிறுவன துணைத் தலைவர்களின் கையொப்பம், ஒப்பந்தப் பத்திரம் உள்ளிடவற்றை போலியாக தயாரித்து ராஜேந்திரனை நம்பவைத்துள்ளார். பின்னர் இதற்காக அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரத்தையும் பெற்றுள்ளார்.
இதற்கிடையே கடைக்கான உரிமத்தை நீண்ட நாட்களாகத் தராமல் பிரதிக் ஏமாற்றி வந்ததால், அவரை ராஜேந்திரன் சந்தித்து, பணத்தையாவது திருப்பி தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது, பணத்தைத் தராமல் பிரதிக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திரன் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து, பிரதிக்கை கைது செய்தனர். விசாரணையில் அவர் இதுபோல் பலரிடம் உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடிகளை ஏமாற்றியதும் தெரியவந்தது.