க்ரைம்

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ கஞ்சா - ஆண்டிபட்டியில் பிடிபட்டது

செய்திப்பிரிவு

தேனி: ஆந்திராவிலிருந்து லாரியில் கருவாட்டுக் கூடைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ கஞ்சா ஆண்டிபட்டியில் பிடிபட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவிலிருந்து தென் மாவட்டப் பகுதிக்கு லாரியில் கஞ்சாகடத்தி வருவதாக தென் மண்டல ஐ.ஜி., தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் சோதனைச்சாவடியில் ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற லாரி ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், கருவாட்டுக் கூடைகளுக்கு இடையே தலா 40 கிலோ எடையுள்ள பொட்டலங்களாக 1,200 கிலோ கஞ்சா கடத்திச் செல்வது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் லாரியை ஆண்டிபட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம், அய்யன் தோப்பு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்(35), இளவனூர் அருகே சிலிப்பியைச் சேர்ந்த செல்வராஜ்(32), சின்னச் சாமி(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம், காக்கிநாடா பகுதியிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும், இதை திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

SCROLL FOR NEXT