புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மையம் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி நொறுங்கிய நிலையில் காணப்படும் மினி வேன். 
க்ரைம்

வம்பன் அருகே பேருந்து, மினிவேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள், 3 ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே நேற்று ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றிச் சென்ற மினி வேனும், அரசுப் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 காளைகளும் உயிரிழந்தன.

விராலிமலை அருகே செவலூரைச் சேர்ந்த முனியப்பன் மகன் மதியழகன்(25), பூலாங்குளத்தைச் சேர்ந்த சின்னப்பா மகன் விக்கி(30) உட்பட 7 பேர் ஒரு மினி வேனில் 3 காளைகளை ஏற்றிக்கொண்டு வன்னியன்விடுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு முடிந்ததும் 3 காளைகளையும் அதே மினிவேனில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மையம் பகுதியில் சென்றபோது, மினி வேனும் எதிரே ரகுநாதபுரம் வழியாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன. இதில், மினிவேன் நொறுங்கி, அதில், பயணித்த மதியழகன், ஓட்டுநரான விக்கி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 3 ஜல்லிக்கட்டு காளைகளும் அந்த இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், சுமை ஆட்டோவில் சென்ற விராலிமலை பகுதியைச் சேர்ந்த 5 பேர் மற்றும் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து ஓட்டுநரான கறம்பக்குடி செட்டி ஊரணியைச் சேர்ந்த எஸ்.ரங்கசாமி (45), நடத்துநர் சின்னபாண்டி உட்பட 6 பேர் என மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விராலிமலையை சேர்ந்த 5 பேர் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் என மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT