காஞ்சிபுரம்: போலீஸ் எனக் கூறி பெண்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் டிசம்பர் 11-ம் தேதி இரவு எம்ஜிஆர் நகர் சாலையில் நடந்து சென்றார். அப்போது காவல்துறையினர் உடையில் வந்த இருவர் அந்தப் பெண்ணை மடக்கி தங்களை போலீஸ் என்று கூறி விசாரணைக்கு வரும்படி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சுண்ணாம்புக் குளம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ்(எ) நாகா. இதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர்கள் இருவரும் இந்த செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுபோல் இவர்கள் காஞ்சிபுரம் பெரியார் நகரில் ஒரு பெண்ணை விசாரணை என்று அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காதலனுடன் தனிமையில் இருக்கும் பெண்களை மிரட்டி விசாரணை என்று அழைத்து சென்று பாலியல் வன்புணர்வை இவர்கள் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர். இதில் பல பெண்கள் அவமானப்பட்டு காவல்துறையினரிடம் புகார் கொடுக்காமல் விட்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் அருகே போலீஸார் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். அப்போது போலீஸார் நாகராஜை கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பிரகாஷை துரத்திச் செல்லும்போது அவர் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.
காதலனுடன் தனிமையில் இருக்கும் பெண்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த இருவருக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு, கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.