ஆசம் பாஷா 
க்ரைம்

சென்னை | குடும்ப சொத்து, ரூ.5 லட்சம் கடன் பிரச்சினை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது உடன் பிறந்தசகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப சொத்து மற்றும் ரூ.5 லட்சம் கடனுக்காக கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்தவர் மருத்துவர் டி.மஸ்தான் (66). திமுகவில் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளராகவும் இருந்தார். சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

முன்னாள் எம்.பி.யான இவர்கடந்த மாதம் 21-ம் தேதி அதிகாலை காரில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி தாண்டிச் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மஸ்தானின் மகன் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில், மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து, மஸ்தானின் கார்ஓட்டுநரான அவரது உறவினர் (தம்பி மருமகன்) சென்னை கதிர்வேடு பகுதியை சேர்ந்த இம்ரான்பாஷாவை (26) போலீஸார் விசாரித்தனர். நண்பர்களுடன் சேர்ந்துமஸ்தானின் வாய், மூக்கை அழுத்தி மூச்சுத் திணறவைத்து கொலை செய்ததாகவும், பின்னர் மாரடைப்பால் இறந்ததுபோல நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இம்ரான் பாஷா கடந்த மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் குரோம்பேட்டை தமீம், கூட்டாளிகள் சைதாப்பேட்டை நசீர் (38), பம்மல் தவுபீக் அகமது (31), குரோம்பேட்டை லோகேஷ்வரன் (23) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டும் நடவடிக்கையாக சிறையில் இருந்த இம்ரான் பாஷா, தமீம்,நசீரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களதுசெல்போனை கைப்பற்றி, அதில்பதிவான போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

இதில், கைதான இம்ரான் பாஷா,தனது மாமனாரும், கொலை செய்யப்பட்ட மஸ்தானின் உடன் பிறந்த தம்பியுமான செங்குன்றத்தை சேர்ந்த ஆசம் பாஷாவுடன் (57) அதிக நேரம் போனில் பேசியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் பாஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. “மஸ்தானிடம், அவரது தம்பியும் எனது மாமனாருமான ஆசம் பாஷா ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தார். கொடுத்த கடனை கேட்டு மஸ்தான் தொடர்ந்து நச்சரித்தார். அவர்களது குடும்ப சொத்தான வீட்டை மாமனாருக்கு எழுதிக் கொடுக்கவும் தடையாகஇருந்தார். இதனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தேன்” என இம்ரான் பாஷா வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் கூறினர்.

இதையடுத்து, மஸ்தானின் தம்பியான ஆசம் பாஷாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், மஸ்தான் குடும்பத்தினர் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், இதுபற்றி சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும், கைதான ஆசம் பாஷாவின் மனைவி ஜூனத், டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார்கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT