பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில் வரையாட்டை துன்புறுத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அழிந்துவரும் விலங்கின பட்டியலில் உள்ள நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ளது. நீலகிரி வரையாட்டை பாதுகாக்க தமிழக அரசு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தையும் அறிவித்து உள்ளது. நீலகிரி தவிர, கோவை மாவட்டத்தின் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.
வால்பாறை மலைப்பாதையில் 1-வது கொண்டை ஊசி வளைவு முதல் 16-வது கொண்டை ஊசி வளைவு வரை சாலையோரங்களில் வரையாடுகள் மேய்ச்சலில் ஈடுபடும். வால்பாறை மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் அவற்றின் கொம்புகள், காதுகள், கால்களை பிடித்து இழுப்பது, வலுக்கட்டாயமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வைப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அச்சமடையும் வரையாடுகள் தப்பி ஓடும் போது, வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை மலைப்பாதையில் காரில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் வரையாடுகளை துன்புறுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குநர் பார்கவதேஜா அறிவுரைப்படி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆழியாறு வனச்சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணையில், வரையாட்டை துன்புறுத்தியது கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த செல்டன் (46) மற்றும் ராஜாக்காடு பகுதியை சேர்ந்த ஜோபி ஆபிரகாம்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ன் அட்டவணை 1-ன்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான வரையாட்டை துன்புறுத்துவது வனக்குற்றமாக கருதப்படும். வனப்பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் வன உயிரினங்களுடன் புகைப்படம் எடுக்க கூடாது” என்றனர்.