க்ரைம்

வேலூரில் பொதுமக்களிடம் நூதன திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் சிக்கினர்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் பொதுமக்களிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வருவதாக வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு காவலர்கள் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், புகார்கள் வரப்பெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பெண்களை வடக்கு காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்கள், சேலத்தைச் சேர்ந்த கவுரி, ரம்யா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களிடம் அருகில் அமர்ந்து பேசுவதுபோல் நடித்து அவர்களின் பைகளில் வைத்திருக்கும் நகை, பணத்தை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

விழாக்கால நேரங்களில் பேருந்து, ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT