திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூரில் இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் வன ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கீழ்கணவாயூர் கிராமத்தில் வசித்தவர் ராமதாஸ் (28). இவரது உடல், வேடக்கொல்லை மேடு கிராமம் சாலையோரத்தில் கடந்த 11-ம் தேதி மீட்கப்பட்டுள்ளது. உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், செம்மரம் கடத்தல் எதிரொலியாக ஏற்பட்ட மோதலில் ராமதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக, கோமுட்டேரி கிராமத்தில் வசிக்கும் வன ஊழியர் ராஜாராம் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடத்தி வரப்படும் செம்மரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் அமைத்து கொடுக்க மறுத்த ராமதாசை அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், தன்னப்பந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் குகன், செய்யாறு பகுதியில் வசிக்கும் கிருபாகரன் ஆகியோருடன் இணைந்து ராமதாசை வலுக்கட்டாயமாக, ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் வனப்பகுதிக்கு ராஜாராமை கடந்த 10-ம் தேதி அழைத்துச் சென்று அடித்து கொலை செய்து, பின்னர் வேடக்கொல்லைமேடு கிராமம் சாலையோரத்தில் உடலை வீசிவிட்டு சென்றுள்ளது உறுதியானது. இதையடுத்து 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.