க்ரைம்

ஓசூரில் ஏடிஎம் மையம் அருகே மாயமான சிறுமி - போலீஸார் மீட்டனர்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே ஏடிஎம் வாசலில் மாயமான 3 வயது சிறுமியை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி அருகே உள்ள குதிரைப் பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு (38). இவர் மத்திகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனது 3 வயது மகளான ரியாஸ்டி என்பவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

ஏடிஎம் மையத்தின் வெளியில் சிறுமியை நிறுத்திவிட்டு உள்ளே பணம் எடுக்கச் சென்ற அன்பு திரும்பி வந்தபோது சிறுமி மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்பு, அப்பகுதியில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே, உதவி ஆய்வாளர் சிற்றரசு தலைமையிலான போலீஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து குழந்தை தானாகவே நடந்து சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் குதிரைப்பாளையம் பகுதியிலேயே ஓரிடத்தில் குழந்தையை போலீஸார் மீட்டனர்.

பின்னர் அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT