உதகை: உதகையில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி டெலிகிராம் செயலிமூலம் லிங்க் அனுப்பி இளைஞரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உதகையை சேர்ந்த 25 வயது திருமணமான இளைஞர், சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் மூலம் முதலீடு செய்து லாபம்சம்பாதிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் செயலி மூலம் இவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டது.
அதில், முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி அந்த லிங்கில் உள்ள வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 484-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் அனுப்பிய பின்னர் ஒருவார காலமாக அவருக்கு எவ்விதமான பதிலும் வரவில்லை.
லிங்க்கில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி மூலமும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து உதகை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை போலீஸார் முடக்கி வைத்துள்ளனர்.
மோசடி ஆசாமிகள்: இது குறித்து சைபர் கிரைம் ஆய்வாளர் பிலிப் கூறும்போது, ‘‘ஆரம்ப காலங்களில் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி அதன்மூலம் மோசடி செய்து வந்தனர். ஓடிபி விஷயத்தில் பொதுமக்கள் உஷார் அடைந்துவிட்டதால், தற்போது சமூக வலைதளங்களில் லிங்க் அனுப்பி அதன் மூலம் மோசடி செய்து வருகின்றனர்.
இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத எண், சமூகவலைதளங்களில் இருந்து வரும் லிங்க்கை தொடாமல், அதைதவிர்ப்பதே நல்லது’’ என்றார். இந்தாண்டு தொடங்கி 10 நாட்களுக்குள் தொழில் முதலீடு செய்வதாக 2 மோசடி புகார்கள், பான் கார்டை அப்டேட் செய்து தருவதாக லிங்க் அனுப்பி 3 புகார்கள்,சமூக இணையதளம் வாயிலாக 5 புகார்கள் என 10 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.