திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்ராஜ் (34). பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களுக்குமுன் தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிறு, சிறு தொகையை வென்று வந்துள்ளார்.
இதனால் ஆர்வம் மிகுதியால், சில நாட்களுக்குமுன் பெரிய தொகையை வைத்து விளையாடியதாக தெரிகிறது. அதில் சிவன்ராஜ் தோல்வியுற்று தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளார். பின்னர் தோற்ற பணத்தை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது.
அதிலும் சிவன்ராஜ் தோற்றதால் செய்வதறியாது திகைத்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் ரூ.15 லட்சம் வரையில் அவர் இழந்ததாக தெரிகிறது. பெருந்தொகையை இழந்த சிவன்ராஜ், கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறினார். மனமுடைந்த அவர், குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பணகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.