திமுக பிரமுகர் செந்தில் 
க்ரைம்

கடலூரில் சர்ச் வளாகத்தில் பாதிரியாரை தாக்கிய புகாரில் திமுக பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூரில் குப்பைக் கொட்டியதில் ஏற்பட்ட தகராறில் பாதிரியாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திமுக கவுன்சிலரின் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் துறைமுகம் 38-வது வார்டு வெலிங்கடன் தெருவில் சிஎஸ்ஐ சர்ச் ஒன்று உள்ளது. கடந்த 8-ம் தேதி இந்த சர்ச்சில் ஒரு விழா நடத்துள்ளது. அதில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன் குப்பைகளை சர்ச்சுக்கு வெளியே கொட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், 42 -வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்திலிடம் கூறியுள்ளனர்.

திமுக பிரமுகரான செந்தில் 38-வது வார்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளரிடம், குப்பைகளை அள்ளி அந்த சர்ச்சின் வாசலில் கொட்டுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை சர்ச் முன்பு, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

இதைக் கண்ட பாதிரியார் பிலிப் ரிச்சர்ட் அங்கு வந்து, ‘ஏன் குப்பைகளை இங்கு கொட்டுகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவரான திமுக பிரமுகர் செந்தில், குப்பைகளை கொட்டச் சொன்னதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிரியார் செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சர்ச்சுக்கு வந்த செந்தில், பாதிரியார் பிலிப் ரிச்சட்டை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த பாதிரியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, பாதிரியார் பிலிப் ரிச்சர்ட் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். செந்தில் மற்றும் அவரது மனைவி கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகிய இருவரும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து, பின்னர் திமுகவுக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT