க்ரைம்

சென்னை | திமுக வட்ட செயலாளர் வீட்டில் திருட்டு: திரைப்பட ஒப்பனை கலைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்வசிப்பவர் முருகன். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான முருகன், திமுக வட்டச்செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராஜாத்தி, பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் முருகனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜாத்தி, திருடன் என கத்தினார். சுதாரித்துக் கொண்ட திருடன் கத்தியைக்காட்டிமிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான தனிப்படை போலீஸார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். முருகன் வீட்டில் திருடியது நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த ஆனந்தன் (27) என்பது தெரிந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

வேலை வாய்ப்பு இன்மை: சினிமா மேக்கப்மேனாக பணியாற்றி வந்த ஆனந்தன், வடபழனிஅழகர் பெருமாள் கோயில் தெருவில் தங்கி இருந்துள்ளார். போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாகவும், யாருக்கும் தன்னை அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக மொட்டை அடித்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT