க்ரைம்

வெளிப்பாளையத்தில் 10 வயது மகளை கொன்று இளம்பெண் தற்கொலை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சவேரியார் கோயில் தெரு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் மனைவி மகேஸ்வரி(30). நாகை நகராட்சியில் தற்காலிக ஊழியர். இவருக்கு, அப்சனா(10) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

மகேஸ்வரியின் கணவர் ஜம்புகேசவன் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, 2014-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் மகேஸ்வரி மற்றும் அவரது மகள் அப்சனா ஆகியோர் தூக்கில் சடலமாகக் கிடந்தது நேற்று காலை தெரியவந்தது.

கணவர் சிறையில் இருப்பதால் மன உளைச்சலில் இருந்து வந்த மகேஸ்வரி, தன் மகள் அப்சனாவை தூக்கிட்டு கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸார் அங்கு சென்று, மகேஸ்வரி, அப்சனா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஸ்வரியின் மகன், மகேஸ்வரியின் அக்கா வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT