விருதுநகர்: விருதுநகர் பேருந்து நிலையத்தில் பழக்கடையில் வேலை செய்து வரும் பாண்டி என்பவரிடம், நேற்று பெண் ஒருவர் ரூ.500 நோட்டை கொடுத்து ஆப்பிள் வாங்கியுள்ளார்.
அந்த ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த பாண்டி, சில்லறை மாற்றி வருவதாகச் சென்று, புறக்காவல் நிலையத்தில் போலீஸாரிடம் இதுபற்றி கூறினார். போலீஸார் விசாரித்ததில், அந்த பெண் சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி சுப்புத்தாய் (56) என தெரியவந்தது. அவர் வைத்திருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் 109 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. இதில் தொடர்புடைய, அவரது மகள் துரைச்செல்வி(36), அவரது தங்கை முத்துமாரியின் கணவர் பாலமுருகன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் சிவகாசியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடமிருந்தும் ரூ.4.25 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.