க்ரைம்

கிருஷ்ணகிரியில் ஒரேநாளில் 3 கடைகளில் ரூ.1 லட்சம் திருட்டு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 கடைகளில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவர் லண்டன்பேட்டையில் நேற்று முன்தினம் ரெடிமேட் கடையை திறந்தார். முதல் நாள் வியாபாரம் முடிந்த பின்னர் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள், சுரேந்தரின் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டி ருப்பதை பார்த்து போலீ ஸாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சுரேந்தர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவைப் போலீஸார் ஆய்வு செய்ததில், கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு கார் கடையின் முன்பு நீண்ட நேரம் நின்றது தெரிந்தது.

இதேபோல், கிருஷ்ணகிரி அருகே பச்சகானப்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் ஷட்டரை உடைத்த உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.80 ஆயிரத்தைச் திருடிச் சென்றனர். மேலும், கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவன ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.4 ஆயிரம் திருடிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் உள்ள மருந்துக் கடையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT