திருச்சி: லால்குடி அருகே ரூ.3.5 லட்சத்துக்கு பெண் குழந்தையை விற்பனை செய்ததாக குழந்தையின் தாய், வழக்கறிஞர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த திருமணமாக இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு முறையற்ற உறவின் மூலம் தனக்கு பிறந்த பெண் குழந்தையை, அரியூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு(42), அவரது மனைவி சண்முகவள்ளி(38) ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
சில மாதங்கள் கழித்து குழந்தையை திருப்பிக் கேட்டபோது, பிரபுவிடம் குழந்தை இல்லாதது தெரியவந்ததால், குழந்தையை மீட்டுத் தருமாறு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கறிஞர் பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பிரபு மனுதாக்கல் செய்தார். இதன் விசாரணையில், முரண்பட்ட தகவல்கள் தெரியவந்ததால், டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் பேரில், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குழந்தையின் தாயை நேற்று முன்தினமும், வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி, கார் ஓட்டுநரான மணக்கால் சூசையாபுரத்தைச் சேர்ந்த ஆசிக்(35) ஆகியோரை நேற்றும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: முறையற்ற உறவில் பிறந்த குழந்தை என்பதால், குழந்தையின் தாய் சம்மதத்துடன், அதை விற்பனை செய்ய வழக்கறிஞர் பிரபுவும், அவரது மனைவியும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரூ.3.50 லட்சத்துக்கு குழந்தையை விற்றுவிட்டு, ரூ.1 லட்சத்துக்கு மட்டும் விற்பனை செய்ததாகவும், அதில் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் எடுத்துக் கொள்வதாகவும் கூறி, ரூ.80 ஆயிரத்தை குழந்தையின் தாயிடம் பிரபு கொடுத்துள்ளார்.
சில மாதங்கள் கழித்து, குழந்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதையறிந்த குழந்தையின் தாய், குழந்தையை மீட்டுத் தருமாறு போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கில் பிரபு மீது நீதிமன்றத்துக்கு சந்தேகம் ஏற்பட்டதால், விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதில் கிடைத்த ஆதாரங்களின்படி, குழந்தையின் தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்தக் குழந்தை 9 பேரிடம் கை மாறிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிகிறது. விரைவில் அந்தக் குழந்தையை மீட்டுவிடுவோம் என்றனர்.