பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

8 மாதங்களாக நிலுவைத் தொகை வழங்காததால் திருச்செந்தூர் நகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: பிளம்பிங் பணிகளுக்கு திருச் செந்தூர் நகராட்சி நிர்வாகம் 8 மாதங்களாக பணம் வழங்காததால் மனவேதனையடைந்த ஒப்பந்ததாரர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அடுத்தடுத்து 2 இடங்களில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைகிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவர், திருச்செந்தூர் நகராட்சியில் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். ரவிக்குமார் நேற்று முன்தினம் மாலையில் அதே ஊர் புதுக்காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ரவிக் குமார் செய்த பணிகளுக்கு 8 மாதங்களாக திருச்செந்தூர் நகராட்சியில் இருந்து பணம் வழங்காததால் மன வேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரவிக்குமாருக்கு சந்திரகாந்தா என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்

சாலை மறியல்: இந்நிலையில் நேற்று காலையில் நடுநாலுமூலைகிணறு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். டி.எஸ்.பி. ஆவுடையப்பன் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ரவிக்குமாருக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நகராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே உள்ள கோயில் நுழைவாயில் முன்பு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் புஹாரி தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் வேலவன், நடுநாலுமூலைகிணறு ஊர் தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சிக்காக ரவிக்குமார் செய்து முடித்த பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஏற்கெனவே பேரூராட்சியாக திருச்செந்தூர் இருந்த போது வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ஆகிய வற்றை சேர்த்து நாளைக்குள் (9-ம் தேதி) வழங்குவதாக நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். மேலும் ரவிக்குமாரின் மூத்த மகள் சரண்யாவுக்கு திருச்செந்தூர் நகராட்சியில் தற்காலிக டெங்கு மஸ்தூர் மேற்பார்வையாளர் பணி வழங்கப்பட்டது. இதை யடுத்து ரவிக்குமாரின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT