சென்னை: தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் ரூ.36.29 லட்சம் மோசடி செய்ததாக அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக சுகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``தங்களது வங்கியில் 2019-ம் ஆண்டு தணிக்கை செய்தபோது, வங்கியில் மனிதவள நிர்வாக மேலாளராக பணியாற்றிய ஆனந்தராஜ் மற்றும் சிலர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உதவியுடன் வங்கி பணியாளர்களை தேர்வு செய்ததில் ரூ.36 லட்சத்து 29,246 செலவானதாக போலியான ரசீதுகளை தயாரித்து வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்'' என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கி முன்னாள் மனிதவள நிர்வாக மேலாளர் வேளச்சேரியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32) பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், போலீஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் கடந்த 2018 முதல் 2019 வரை தனது சக வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து வங்கிக்கு, பணியாளர்களை தேர்வு செய்த விதத்தில் செலவானதாக போலியான ரசீதுகளை தயார் செய்து, பணத்தை பங்கிட்டு மோசடி செய்துள்ளது தெரியவந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.