தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் வாலிபர் ஒருவர். தற்கொலை செய்வதை அவர் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர், கீழவாசலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.வண்டி இழுக்கும் கூலி தொழிலாளியான இவரது மகன் நந்தகுமார் (22) 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு, அலுமினிய தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ 1.5 லட்சம் பணம் வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாது, அப்புறம் வாங்கி தருகிறேன் என தந்தை கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த நந்தகுமார், கடந்த டிச. 29-ம் தேதி, கல்லணை கால்வாய் நடைபாதையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். விஷம் குடிப்பதை செல்பி வீடியோவாக பதிவு செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த நண்பர்கள் சிலர், அங்கு வந்து மயக்க நிலையில் இருந்த நந்தகுமாரை மீட்டு, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.