அரூர்: அரூர் பகுதியில் கடந்த ஆண்டு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் சாராயம் விற்ற 1,455 பேரை கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கம்பைநல்லூர், கடத்தூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் கடைகள், ஓட்டல்களில் மது குடிக்க அனுமதித்தவர்கள், சாராயம், மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் என கடந்த ஓராண்டில் 1,455 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 318 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மது பாட்டில்கள், 874 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்கள், விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 48 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.